அன்பின்றி ஓருயிரும் இயங்காது:
அன்னையின் அன்பு குழந்தைகளிடத்தில், குழந்தைகளின் அன்பு பெற்றவரிடத்தில், ஆன்மீகவாதியின் அன்பு கடவுளிடத்தில், கடவுளின் அன்பு ஏழைகளிடத்தில், கணவனின் அன்பு மனைவியிடத்தில், இப்படி ஒருவர் மேல் இன்னொருவர் காட்டும் அன்பு பொய்யானதோ போலியானதோ அல்ல. உறவுகளிடத்தில் மட்டும் அன்பு செலுத்துவோர் சிலர். உறவுகள் அல்லாத சக மனிதர்களிடத்தில் அன்பு செலுத்துவோர் சிலர். உறவுகளால் கைவிடப்பட்டும், உறவுகள் யாரென்றே தெரியாமலும் வாழும் மனிதரிடத்தில் அன்பு செலுத்துவோர் மிகச் சிலர்.
வள்ளுவனின் அன்பு:
ஒவ்வொருவரும்..ஒவ்வொருவரின் அன்புக்காக ஏங்குகிறோம்..."அன்புக்கு இல்லை அடைக்கும் தாழ்".. என்று வள்ளுவன் சொன்னது போல் குறிப்பிட்ட சிலரிடத்தில் மட்டும் நாம் அன்பு செலுத்துவதை மாற்றிக்கொள்ள வேண்டும். அனைவரிடத்திலும் அன்பு காட்ட பழகி விட்டால் அன்பே சிவம் என்பது போல் அன்பே உலகம் என்றாகிவிடும்.
அன்பில்லாதவர் என்று உலகில் யாருமில்லை, சந்தர்ப்பங்களும் வாழ்க்கை முறையும் அவர்களுக்கு அவ்வாறு அமைந்திருக்கலாம். சுயநலத்துடன் வாழ விரும்பினால் ஒரு சிலரிடம் மட்டுமே அன்பு செலுத்த முடியும். பொதுநலத்துடன் வாழ ஆரம்பித்தால் அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் பிறக்கும்.
சில கேள்விகள் :
கேட்கப்படாத சில கேள்விகள் ,
நமக்கு பிடித்தவர்கள், நெருக்கமானவர்களிடத்தில் காட்டும் அன்பை ஏன் அனைவரிடத்திலும் காட்டத் தவறுகிறோம்....?
அநாதை ஆசிரமத்தில், முதியோர் இல்லத்தில் ஆதரவற்று வாழும் மனிதர்களிடத்தில் சக மனிதர்களாகிய நாம் அன்பு காட்டவும், அவர்களிடத்தில் நேரத்தை செலவிடவும் ஏன் தயங்குகிறோம்..?
ஒரு கதை:
அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து நன்கு படித்த ஒரு இளைஞன் கோவிலுக்கு செல்கிறான்..
கோவில் பூசாரி கேட்கிறார், சுவாமி கிட்ட நல்லா வேண்டிக்கொள்....நீ நினைத்ததை நடத்தி தருவார் என்று.
அந்த இளைஞன் கேட்கிறான்: சுவாமி சாமி கிட்ட நான் என்ன கேட்டாலும் தர முடியுமா?
பூசாரி சொல்கிறார்: கேளப்பா..
இளைஞன்: உறவுகள் யாரென்று தெரியாமல், எங்கு பிறந்தோம், என்று பிறந்தோம் என அறியாமல் எத்தனையோ குழந்தைகள், என்னைப் போல் இளைஞர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...
அம்மா என்று அழைக்க யாருமில்லை...
அன்பு காட்டி அரவணைக்க யாருமில்லை...
அநாதை இல்லத்தில்...
ஆதரவு காட்டுபவரின் கட்டுப்பாட்டில் வளர்கிறோம்...
அரசாங்க பள்ளிகளில் படிக்கிறோம்...
அன்று உணவு கிடைத்தால் உண்கிறோம்........
அணிந்து கொள்ள அழகான ஆடைகள் இல்லை...
அன்னை தந்தையுடன் வரும் குழந்தைகளை பார்த்து ஏங்குகிறோம்...
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்,
அன்னை போல் அன்பு காட்ட...
தந்தை போல் தோள் கொடுக்க..
குறைவில்லா உணவு கிடைக்க...
நோயில்லா வாழ்வு கிடைக்க...
கதை சொல்லும் பாட்டி....
விளையாட தோழர்கள்....
என எங்களுக்கும் எல்லாம் வேண்டும்.........
என்கிறான்....
பூசாரி சொல்கிறார் :
தம்பி..."தெய்வம் மனுஷ ரூபே" ......என்று சொல்வார்கள்...நம் வீடு..நம் வாழ்க்கை என்று மட்டும் வாழாமல்.....அன்புக்காக எங்கும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கும், முதியோர்களுக்கும், என அனைவரிடத்திலும் அன்பு காட்டும் மனிதர்கள் உருவாக வேண்டும்.....
உன் வேண்டுதல் ஒரு நாள் நிச்சயம் பலிக்கும்....என்றார்....
கதை முற்றிற்று....
ஆனால் நிஜமும் இதுதானே....
அன்புக்கு விலையில்லை.....
அன்பு காட்ட கட்டாயமில்லை.....
ஆதலால் அன்பு செய்வோம் அனைவரிடத்தில்....
அகிலம் முழுதும் மாற்றுவோம்....
அன்பும் அன்பு சார்ந்த இடமுமாக.....
காயத்ரி பாலாஜி..